சசியும் அவரது கவிதைகளும் - 6
தற்காலத் தமிழில் சசி ஒரு வித்தியாசமான, தனித்துவமான கவிஞர் என்று ஏற்கனவே சொன்னேன். இவர் முலம் நவீன தமிழ்க் கவிதை சில சிகரங்களை எட்டியிருக்கிறது என்பதை இத்தொகுப்பை படிப்பவர்கள் காண்பார்கள். சந்தியிலே நிற்கிறேன், மண்ணும் மனிதரும், ஆக்காண்டி, பரவளைவுக்கோடு, மென்மையின் தளைகளிலிருந்து, ஆதாம்கள் ஆயிரம், மறுதலை, மரியாத உயிர்ச்சுவடும் விலகிச் செல்லும் மையங்களும், வெளியார் வருகை என்பன எனக்கு சில சிகரங்களாகத் தெரிகின்றன. வேறு சிலருக்கு வேறு சில சிகரங்கள் தெரியலாம். ஆனால், அற்பம் என்று ஒதுக்கக்கூடியவை இந்தத் தொகுப்பிலே யாருக்கும் அதிகம் கிடைக்காது என்றே சொல்வேன். இப்போது திரும்பிப் பார்க்கையில் சில கவிதைகள், உதாரணத்துக்கு, ஒரு ஞாயிற்றுக்கிழமை இன்னும் சற்று செறிவாக இறுக்கமாக அமைந்திருக்கலாம் என்று தோன்றினாலும் 'நான்காம் இரவு' தவிர மற்ற கவிதைகள் எல்லாவற்றிலுமே சசியின் முத்திரை பளிச்சிடவே செய்கின்றது.
சிவலிங்கம் தன் கவிதைகள்பற்றி ஒருபோதும் பெருமைப் பட்டுக்கொண்டவர் அல்ல. இத்தொகுப்பில் உள்ளவற்றுள் சுமார் மூன்றில் ஒரு பங்குக் கவிதைகள்தான் இதுவரை பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றன. அவற்றைக்கூட கவனமாக சேர்த்து வைத்துப் பேணும் பழக்கம் அவரிடம் இல்லை. எழுதியவற்றில் கை எழுத்துப் பிரதியிலேயே காணாமற்போனவை பல. அவருடைய பெரும்பாலான கவிதைகளுக்கு நான்தான் முதல் வாசகனாக இருந்திருக்கிறேன். சிலவற்றுக்கு இன்றுவரை நான் மட்டும்தான் வாசகனாக இருந்திருக்கிறேன். நீண்டகால வற்புறுத்தல்களுக்குப் பிறகு சங்கோசத்துடன் என்றாலும் இந்தத் தொகுப்பை வெளிவிட அவர் சம்மதித்திருக்கிறார். இத்தொகுப்பின்மூலம் இன்றைய தமிழ்க் கவிதை ஒரு புதிய 'வெளிச்சத்தைப்' பெறும் என்பதே என் நம்பிக்கை.
-எம்.ஏ.நு·மான்
27.10.1988
நன்றி: 'நீர் வளையங்கள்' தமிழியல் வெளியீடு. கிடைக்குமிடம்: க்ரியா, 268
ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை-14
ச.சி. @ 12/30/2003
முகப்பு