கவிதை கவிஞனின் சமூக, அரசியல் பிரக்ஞையின் வெளிப்பாட்டுச் சாதனம் மட்டுமல்ல; அது அவனது முழுமையான உணர்வுலகையும் தழுவி நிற்பது. மொத்தமான வாழ்க்கை அனுபவத்தின் ஒரு வெளிப்பாட்டுச் சாதனம் அது. இரத்தமும் சதையும் உள்ள எல்லா மனிதர்களையும் போலவே கவிஞனும் பல்வேறு வகையான வாழ்க்கை அனுபவங்களுக்கு உள்ளாகிறான். அதனாலேயே 'எகிப்தின் தெருக்களிலே' எழுதிய ஒரு கவிஞனால் 'இன்று இரவு' எழுதுவதும் சாத்தியமாகின்றது. இது கவிஞர் மனிதனாக இருப்பதன் அடையாளம். அவன் தன் இருத்தலுக்குப் பிரக்ஞையாக இருப்பதன் அடையாளம். ஆனால் நமது பெரும்பாலான கவிஞர்களைப் பொறுத்தவரைகவிதை இத்தகைய ஒன்று அல்ல. பலருக்கு அது சமூக மாற்றத்துக்கான ஒரு கருவி மட்டும்தான். சமூக, அரசியல் பிரச்சினைகளைச் சொல்வதற்கு மட்டுமே அவர்கள் கவிதையைப் பயன்படுத்துகின்றனர்; பயன்படுத்தவேண்டும் என்கின்றனர். வேறு பலருக்குக் கவிதை, வடிவம் சார்ந்த ஒரு பரிசோதனைக் கருவிதான். எதிர்க்கவிதை, படிமக் கவிதை, ஹைக்கூக் கவிதை என எழுதி, தாங்களே இவற்றை தமிழில் முதலில் அறிமுகப்படுத்தியதாகவும் சுயதிருப்தி உறுவர். இவர்களைப் பொறுத்தவரை கவிதை மூளை சார்ந்தது. தங்கள் கெட்டித்தனத்தைக் காட்டும் ஒரு வித்தை. தங்கள் சுயத்தில் குரல் அல்ல. இவர்கள் எல்லாருமே தங்கள் சுயத்தின் பெரும்பகுதியை மறைத்துக் கொண்டு தங்களுக்குச் சமூக அங்கீகாரம் பெற்றுத் தரக்கூடிய ஒரு சிறு பகுதியை மட்டும் கவிதைக்குள் கொண்டு வருபவர்கள். அந்த வகையில் ஒற்றைப் பரிமாணிகள்.
சண்முகம் சிவலிங்கம் இவர்களுள் ஒருவரல்ல. அவர் தன் சுயத்தை முழுமையாக வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதை விரும்பும் ஒரு கவிஞர். "இருத்தலும் இருத்தலுக்குப் பிரக்ஞையாய் இருத்தலும்" முக்கியமானது என்று கருதுபவர். தனது மூல விக்கிரகத்தை நாம் காணவேண்டும் என்பதற்காக, அதில் நமது மூல விக்கிரகத்தையும் தரிசிக்கவேண்டும் என்பதற்காக-தன்னைத் திரை நீக்கிக் காட்டுகிறார். அவர். எல்லா நல்ல கவிஞர்களினதையும் போல அவரது முகமாக இருக்கிறது. அவரின் இருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக அமைகின்றது. அவரது உணர்வுகளையெல்லாம் பிரதிபலிக்கிறது. அவரது மன அமைப்பின் வெவ்வேறு பரிமாணஙக்ளை அவரது கவிதைகள் மூலம் நாம் காண்கின்றோம். அவரது சமூக, அரசியல் கவிதைகள் அவரின் ஒரு பக்கத்தைக் காட்டுகின்றன என்றால், அவரது தன்னிலைக் கவிதைகள் (personal poems) அவரின் வேறொரு பக்கத்தைக் காட்டுகின்றன. அவரது கவிதைகளில் கணிசமானவை அவரைப்பற்றிய கவிதைகள்தான்.
சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு சசி எழுதிய கவிதை நீர்வளையங்கள். இது அவரது முக்கியமான தன்நிலைக்கவிதைகளுள் ஒன்று. அவரின் மனக்குளத்தில் வீசப்பட்ட ஒரு கல் எழுப்பும் நீர்வளையங்களாக- உணர்வலைகளாக- அமைகிறது கவிதை. மென் உணர்வுகளும் இலட்சியங்களும் நிறைந்த 29 வயது இளம் கவிஞனின் இதயக் குரலாக அது அமைந்துள்ளது. 'ஏகமும் நாம் என்று எண்ணுபவர்களுக்கு' எதிர்வினையுமாகும் அது.
'எச்சிறிய புல்லும் அதன் இயல்பினிலே முழுமை இடுகாட்டில் முளைக்கின்ற கழனியும் ஓர் அருமை' என்பது கவிஞனின் தரிசனம்.
'நீர்வளையங்கள்' இத்தொகுப்பின் தலைப்பாகவும் இருப்பது இதற்கு ஒரு குறியீட்டுத்தன்மையும் தருகின்றது. ஒவ்வொரு கவிதையும் வெளித் தாக்கத்தினால் கவிஞனின் மனக்குளத்தில் எழும் நீர்வளையங்கள்தான் என்பதை இது குறித்து நிற்கிறதுபோலும்.
1977க்குப் பிந்திய பத்தாண்டுகள் சசியின் தனிப்பட வாழ்க்கையிலும் நெருக்கடிகள் மிகுந்த காலம். விரக்தியும், சோர்வும், நீராசையும் அவரை ஆட்கொண்ட காலம் இது. அவரது சொந்த மனமுறிவுகள் இக்காலத்தில் எழுதப்பட்ட பல கவிதைகளில் பதிவாகியுள்ளன. நிலவும் ஒரு வழிப்போக்கனும், மறுதலை, வெறும் வரிகளும் ஒரு முன் இளவேனிலும், நத்தைச் சுகம், தவறிய பருவங்கள், ஒரு பிரியாவிடை, மீண்டும் எழுந்திருக்கையில், மரியாத உயிர்ச் சுவடும் விலகிச் செல்லும் மையங்களும் முதலியவை இத்தகையன. சிலவேளை நீராசையை ஒரு வாழ்வியல் தத்துவமாகக் காணவும் இவர் தூண்டப்பட்டுள்ளார். மறுதலையில் இந்த நோக்கு கூர்மையாக வெளிப்படுகின்றது. சிலவேளை இவர் தன்னை அளவு மீறி நசித்துத் துன்புறுத்துகிறார் என்று தோன்றுகிறது. மறுதலை, வெறும் வரிகளும் ஒரு முன்இளவேனிலும், ஒரு பிரியாவிடை, மீண்டும் எழுந்திருக்கையில், விலகிச்செல்லும் மையங்கள் போன்றவற்றில் இதுவே நிகழ்ந்துள்ளடு. சுயதுன்புறுத்தலின் சாயலை நான் இவற்றில் காண்கிறேன். 'நான் அது அல்ல, அது என்னில் உள்ளதல்ல' என தன்னையே நிராகரித்தலும், தன்னை ஒரு living fossileஆக, xiphosurdaeஆக காண்பதும் என்னைப் பொறுத்தவரை அவரைப்பற்றி அவருக்குள் நிகழும் ஒரு பொய்த்தோற்றமாக(illusion) ஒரு திரிபுக் காட்சியாகவே இருப்பினும் அதன் மூலம் நமக்குச் சில நல்ல கவிதைகள் கிடைத்துள்ளன. மறுதலை, விலகிச் செல்லும் மையங்கள் என்பன தமிழில் மிகவும் வித்தியாசமான கவிதைகள்தான்.
- எம்.ஏ.நு·மான்
பகுதி - 6